தொண்டியக்காடு கடற்கரை அருகே வந்த அயல்நாட்டவர்-சீன ராணுவத்தினரா?

ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 8, 2010
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு கடற்கரைப் பகுதிக்கு அயல்நாட்டவர்கள் சிலர் வந்து சென்றுள்ளனர். அந்த ஆசாமிகள், இலங்கையில் முகாம் அமைக்க வந்திருக்கும் சீன ராணுவத்தினராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.


பாகிஸ்தான் ஊடுறுவலைத் தடுக்க கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். ஆனால் சத்தம் போடாமல் தென்னகத்திற்கு வெகு அருகே வந்து உட்கார்ந்திருக்கும் சீனர்களால் நமக்கு ஏற்பட்டு வரும் ஆபத்து குறித்து படு அலட்சியமாக உள்ளது இந்திய அரசு.


தமிழக கடற்கரையோரங்களில் குறிப்பாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டனம் கடற்கரையோரங்களில் அவ்வப்போது இலங்கை படையினர் ஊடுறுவி வருவது குறித்து மத்திய அரசு அக்கறை இல்லாமல்இருக்கிறது. மேலும், கச்சத்தீவில் சீனப்படையினர் நிலை கொண்டிருப்பதாக வரும் தகவல்கள் குறித்தும் மத்திய அரசு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்குள் 2 சீன ராணுவத்தினர் வந்து போயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொண்டியக்காடு கடற்கரை கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் ராணுவ உடையில் வந்த இரண்டு பேர் அந்தப்பகுதியில் விறகு வெட்டிக் கொண்டிருந்த நாகரத்தினம் என்ற பெண்ணிடம் தமிழ் அல்லாத ஏதோ ஒரு மொழியில் பேசியிருக்கிறார்கள்.
நாகரத்தினத்திற்கு அந்த மொழி தெரியாததால் கடற்கரைக்கு வழி கேட்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு கடற்கரை பக்கமாக வழி காட்டியுள்ளார்.
இதன் பின்னர் ஊருக்குள் வந்த நாகரத்தினம், அங்கிருந்த பொதுமக்களிடம் சற்று வித்தியாசமான முறையில் தோற்றம் கொண்ட இருவர் ராணுவ உடையுடன் இருந்தனர். அவர்கள் பேசிய மொழியும் எனக்கு தெரியவில்லை. அதனால் அவர்களிடம் கடற்கரை வழியை காட்டிவிட்டு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.



இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காட்டுப்பகுதி மற்றும் கடற்பகுதிக்குள் தேடிப்பார்த்தும் அவர்களை காணவில்லை. அதன்பிறகு காவல்துறைக்கு தகவல் சொல்லப்பட்டது.



இதையடுத்து போலீஸ் டிஐஜி திருஞானம், எஸ்.பி.பிரவீண்குமார், ஏ.எஸ்.பி.சரவணன் ஆகியோர் தலைமையிலான படையினர், கடற்பகுதி மற்றும் அலையாத்திக் காடுகளிலும் தேடி வருகின்றனர்.



காட்டுப்பகுதிக்குள் வந்தவர்கள் இலங்கையில் ராணுவ முகாம் அமைக்க வந்திருக்கும் சீன ராணுவத்தினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.