தூக்கில் தொங்கும் தீர்ப்புகள்!-(பாராளுமன்ற தாக்குதல்)




தேசத்தை நேசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது நாட்டின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்க முடியும். நாட்டுநடப்புகள் நன்றாக இல்லை என்று யாராவது அழுதுபுலம்பினாலோ, முணுமுணுத்தாலோ அதற்குக் காரணம் அவர்கள் பிறந்த பொன்னாட்டை வெறுப்பதால் அல்ல. தவறுகள் திருத்தப்படாதா, நான் பிறந்த நாடு போற்றுதலுக்கு மட்டுமே உரிய நாடாக மாறிவிடாதா என்கிற ஏக்கமும் ஆதங்கமும்தான் காரணமே தவிர, அது நாட்டுப்பற்று இல்லாமையால் அல்ல. 63 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சம்பளமாக விழுங்கும் நிர்வாக இயந்திரமும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் இருந்தும் முக்கியமான பிரச்னைகளில் முடிவெடுக்கக்கூடத் துணிவில்லாத அல்லது மனமில்லாத நாடாக இந்தியா தொடர்கிறதே என்று ஆதங்கப்படுவது தவறா என்ன?

2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி இந்திய நாடாளுமன்றம் தீவிரவாத சக்திகளால் தாக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. அப்படி இந்திய நாடாளுமன்றத்தையே தகர்த்தெறியும் திட்டத்தின் சூத்திரதாரிகளில் ஒருவரான அப்சல் குரு என்பவர் பிடிபட்டார். இது சர்வாதிகார நாடாக இருந்தால், அடுத்த சில நாள்களிலேயே அப்சல் குரு சுட்டுக் கொல்லப்பட்டிருப்பார்.
நாடாளுமன்றத்தைத் தாக்கிய குற்றத்துக்கான வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நடந்து, 2002-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி குற்றவாளியான அப்சல் குருவுக்குத் தூக்குத்தண்டனை அளிப்பது எனத் தீர்ப்பும் வழங்கப்பட்டது. உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததாலேயே விஷயம் முடிந்துவிடாதே; மேல்முறையீடு செய்வதற்காக, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைப்பது என்று 2005 ஆகஸ்ட் 4-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு இதற்குள் 3 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
2006-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி, உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீதான தடை விலக்கப்பட்டு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டு, தூக்கிலிடுவதற்கான நாளும் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது, அப்சல் குருவின் மனைவி தபாசம், குடியரசுத் தலைவருக்கு ஒரு கருணை மனுவைச் சமர்ப்பிக்கிறார். இதுபோன்ற கருணை மனுக்களின் மீது குடியரசுத் தலைவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துவிட முடியாது. அவர், தனக்கு ஆலோசனை வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அந்தக் கருணை மனுவை அனுப்புகிறார்.
இதெல்லாம் நடந்தது 2006-ம் ஆண்டில். மத்திய உள்துறை அமைச்சகம், குற்றவாளி அப்சல் குரு தொடர்பான கோப்புகளை தில்லி மாநில அரசுக்கு அனுப்பி அந்த அரசின் கருத்தைக் கோருகிறது. தில்லி அரசுக்குப் போன அப்சல் குருவின் கருணை மனு தொடர்பான கோப்பு கிணற்றில் போடப்பட்ட கல்லாக அப்படியே கிடக்கிறது. பத்திரிகைகள் பக்கம்பக்கமாக எழுதின. பொதுநல சங்கங்கள் ஊர்வலங்கள் நடத்தின. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. ஊஹூம், அந்தக் கோப்பைப் பற்றிய பேச்சுமூச்சே காணோம்.
மத்திய உள்துறை அமைச்சகம் திடீர் திடீரென்று விழித்துக்கொண்டு தில்லி மாநில அரசுக்கு கோப்புப் பற்றி நினைவூட்டும். ஒருமுறை இருமுறை அல்ல, 16 முறைகள் மத்திய உள்துறை அமைச்சகம் குற்றவாளி அப்சல் குருவின் கருணை மனு மீதான தில்லி அரசின் கருத்தைக் கேட்டும் தில்லி அரசு ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமலேயே இருந்திருக்கிறது.
இதுவே எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலமாக இருந்தால் இந்தக் காரணத்துக்காகவே அந்த ஆட்சியைக் கலைத்திருந்தாலும் ஆச்சரியமில்லை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் 16 கடிதங்களை தில்லி அரசு பார்த்தும் பார்க்காமலும் இருந்தது என்றால், அதுவே நம்பும்படியாக இல்லை.
கடந்த மே மாதம் 18-ம் தேதி தில்லி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்குச் சில விளக்கங்களைக் கேட்டு ஒரு கடிதம் அனுப்புகிறார். விளக்கங்கள் கிடைத்ததும் உடனடியாக தில்லி அரசு முடிவெடுத்ததா என்றால் அதுவும் இல்லை. இரண்டு வாரத்துக்கு முன்புதான் சற்று மனம்இறங்கி, குற்றவாளி அப்சல் குரு சம்பந்தப்பட்ட கோப்புகளைத் திருப்பி அனுப்பியிருக்கிறார் தில்லி துணைநிலை ஆளுநர் தேஜேந்தர் கன்னா.
அப்சல் குருவைத் தூக்கிலிடுவது என்கிற தீர்ப்பில் தங்களுக்கு எந்தவிதக் கருத்து வேறுபாடும் கிடையாது என்று கூறியதுடன் அவர் நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. "அப்சல் குருவைத் தூக்கிலிடுவதால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை பற்றி நன்றாக மறுபரிசீலனை செய்துவிட்டு முடிவெடுக்கவும்' என்று அவர் பரிந்துரைத்திருப்பதுதான் விந்தையிலும் பெரிய விந்தை.
அப்சல் குரு இந்திய நாடாளுமன்றத்தையே தகர்க்க முயன்ற நாசகாரக் கும்பலைச் சேர்ந்தவர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர். அவரைத் தூக்கிலிடுவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்கிறாரே தில்லி துணைநிலை ஆளுநர், அப்படி சட்டம்-ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துபவர்கள் யார் என்றும் குறிப்பிட்டிருக்கலாமே...
இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சகோதரர்கள் அப்சல் குருவுக்காக வருத்தப்படுவார்கள் என்றோ குரல் கொடுப்பார்கள் என்றோ யாராவது நினைத்தால், அப்படி நினைப்பவர்கள்தான் தேசத் துரோகிகள். இந்தியாவிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களைக் களங்கப்படுத்துவதும், அவர்களது தேசபக்தியைக் கொச்சைப்படுத்துவதும்தான் இப்படிக் கூறுபவர்களின் உள்நோக்கம். குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
குற்றவாளியாகவே இருந்தாலும்கூட தூக்கிலிடுவதற்கு முன்னால் தீர யோசித்து முடிவெடுப்பதில் தவறில்லை. ஆனால், தவறான காரணத்தைக் காட்டி தீர்ப்பைத் தள்ளிப்போடுவது ஏற்புடையதல்ல. கருணை மனுவை காலவரையில்லாமல் ஒத்திபோடுவது நீதிக்கும் இழுக்கு, சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கும் இழைக்கப்படும் அநீதி.
தேசத்தை நேசிப்பதால் கோபம் வருகிறது. தூக்கிலிடப்பட வேண்டியது அப்சல் குருவையா, இவர்களையா? இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால், இந்திய மக்களே கொதித்தெழுந்து நாடாளுமன்றத்தைத் தகர்த்தெறிந்து விடாமல் இருக்க வேண்டுமே என்கிற கவலை மேலெழுகிறது...

நன்றி தினமணி தலையங்கம் 31 .08 . 2010