.
இரா. மகாதேவன் 05 Aug 2010
இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இப்போது நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 3 கோடி.
இந்த வழக்குகளின் ஒரு பகுதியாக நிலுவையில் உள்ளதுதான் விவாகரத்து வழக்குகள். இவற்றின் எண்ணிக்கை நாடு முழுவதும் சுமார் 55 ஆயிரம். நாட்டில் சட்டம், ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் பெரும்பான்மையாக நிலுவையிலுள்ள கோடிக்கணக்கான வழக்குகளை விரைந்து தீர்க்க முனையாத மத்திய அரசு, பண்பாட்டோடு தொடர்புடைய விவாகரத்து வழக்குகளை விரைந்து முடிப்பதற்காக அதீத முயற்சி எடுத்துக்கொண்டுள்ளது.
அதாவது, நிலுவையில் உள்ள 55 ஆயிரம் விவாகரத்து வழக்குகளையும் விரைந்து தீர்ப்பதற்காக இந்து திருமணச் சட்டம் 1955, 13-வது பிரிவிலும், சிறப்புத் திருமணச் சட்டம் 1954, 24-வது பிரிவிலும் திருத்தம் கொண்டுவருவதுதான் அது.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் இனி தம்பதிகள் 2 வாரங்களில் விவாகரத்து பெற முடியும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக, உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மணமுறிவு பெறுவோரின் எண்ணிக்கை மிகக்குறைவுதான் என்றாலும், இப்போது இந்த எண்ணிக்கை "ஜெட்' வேகத்தில் உயர்ந்து வருவது நம்மை அச்சுறுத்துவதாகவே உள்ளது.
அன்பு செய்வதற்கும், சகிப்புத்தன்மைக்கும் உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கிய பாரதத் திருநாட்டில், மணமுறிவு பெறுவோரின் எண்ணிக்கை உயர்ந்தது எவ்வாறு?
கல்வியின் காரணமாக, அவர்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு, சமஉரிமைச் சிந்தனைகளினூடே பரவிய மேற்கத்திய கலாசாரம் என்ற விஷக்கிருமிகள் இன்று நோயாக மாறி, குடும்ப அமைப்புகளைச் சிதைத்து வருவதாலேயே விவாகரத்து கேட்டு வழக்குத் தொடரும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அதேபோல, விழிப்புணர்வு பெற்ற நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்த பிறகு, ஆண்கள், பெண்களுக்கான பொறுப்புகளைப் பிரித்துக்கொடுத்து, உரிமைகளை வழங்கி, அவர்களின் முரண்பாடுகளைப் பொறுத்துச் செல்லும் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.
"கூடிவாழ்ந்தால் கோடி நன்மை', "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை', "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' போன்ற பொன்மொழிகள் மூலம் ஒற்றுமை, சகிப்புத்தன்மை, அன்பு பாராட்டுவது ஆகியவற்றை நம் முன்னோர்கள் வளர்த்து வந்தனர். ஆனால், இன்று இவையெல்லாம் மறைந்து, உரிமை பேசுவதும், சுதந்திரப் போக்கை நாடுவதும், வேலைப் பளுவைக் குறைப்பதற்காக குழந்தைகளை விடுதியில் சேர்த்துவிடுவதும், வயதானவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்துவிடும் போக்கும் அதிகரித்துள்ளது.
இவற்றுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இந்து திருமணச் சட்டத்திருத்தம் அமைந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. குறைந்தது 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும், பிறகு ஓராண்டுக்கும் மேலாக உள்ள வழக்குகளுக்கும் முன்னுரிமை கொடுக்க உள்ளதாகக் கூறப்பட்டாலும், நாளடைவில் உயரும் வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இவை விரைவாகவும், அவசரமாகவும் விசாரிக்கப்பட்டு மிகக் குறைந்த இடைவெளியில் தீர்ப்பு வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
விவாகரத்து பெறுவது என்பது இரு தரப்பைப் பொறுத்தவரை நியாயமானதாகவும், உரிமை என்பதாகவும் இருந்தாலும், நமது பாரம்பரியம், பண்பாடு என்னும்போது, இந்தப் போக்கு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
குறிப்பிட்டுச் சொல்லப்போனால், அண்மையில் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவின்போது, உலகமே எதிர்பாராத வகையிலும், வியக்கும் வகையிலும் இந்தியா அதை வெற்றிகரமாகச் சமாளித்துக் காட்டியது. இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்பட்டது, இந்திய மக்களின் சேமிப்பு மற்றும் வாழ்க்கைமுறைதான்.
இந்தச் சேமிப்பு, வாழ்க்கை முறைதான் நமது அடிப்படை எனும்போது, அதைச் சிதைக்கும் காரணிகளில் ஒன்றான விவாகரத்தைத் தடுக்க நாம் செய்தது என்ன? விவாகரத்தில் தொடரப்பட்ட வழக்குகளை விரைந்து முடிப்பதில் ஆர்வம் காட்டு அரசு, இதுபோன்ற பண்பாட்டைச் சீரழிக்கவல்ல போக்கைத் தடுக்க என்ன முயற்சியை இதுவரை மேற்கொண்டுள்ளது?
மணமுறிவைத் தடுக்க குடும்ப ஒற்றுமை, நேசம் குறித்தும், அதனால் விளையும் பயன்கள் குறித்தும் பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவை கடமை உணர்வோடு போதிக்கப்பட வேண்டும். இளம் வயதிலேயே குடும்பம் குறித்து குழந்தைகளின் மனதில் பதியும் நேர்மறைச் சிந்தனைகளால் வருங்காலத்தில் விவாகரத்தின் எண்ணிக்கையை பலமடங்கு குறைக்க முடியும்.
அதோடு, கூட்டுக் குடும்பமாக வாழ்பவர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களுக்கு அரசு வரிச்சலுகைகளை அளிப்பதோடு, அரசின் நலத் திட்டங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
முக்கியமாக, இந்திய நடைமுறைச் சட்டங்கள் அனைத்தும் பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை வழங்குவதாக இருக்க வேண்டும். இரு வாரங்களில் விவாகரத்து வழக்கில் முடிவெடுப்பது, ஆண்களுக்கான சட்டப்படியான திருமண வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைப்பது போன்ற அரசின் முடிவுகளும், பாலியல் தொழில், ஓரினச் சேர்க்கை போன்றவற்றை அங்கீகரிக்க வலியுறுத்தப்படுவதும், இந்தியாவில் ஒளிபரப்பாகும் அயல்நாட்டு தொலைக்காட்சி சேனல்களில் நீலத் திரைப்படங்களை ஒளிபரப்புக்கு அனுமதியளித்துள்ளதும் இந்தியாவின் பண்பாட்டைச் சிதைக்க நினைக்கும் குள்ளநரிகளின் எண்ணங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகவே உள்ளது.
முற்போக்கு வாதம், பிற்போக்கு வாதம் என்ற வகையில் இவற்றைக் கையில் எடுக்காமல் ஒவ்வொருவரும் தங்களுக்கு உள்ள அடிப்படை உரிமையையும், சுதந்திரத்தையும் விட்டுக்கொடுக்காத வகையில் இந்தியாவின் பண்பாட்டைக் காப்பாற்றுவதில் கடமையாற்ற வேண்டும்.