விநாயக தாமோதர சவார்க்கர் - பிரச்சாரமும் உண்மையும்-அரவிந்தன் நீலகண்டன்

இந்தியாவின் மெக்காலேயிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ்ட் போலி மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வெறுக்க விரும்பும் மனிதர், வீர சவார்க்கர் என அறியப்படும் விநாயக தாமோதர சவார்க்கர்(1883ெ1966). மெக்காலேயிஸ்ட் போலி மதச்சார்பற்ற அரசு அதன் தொடக்க காலங்களிலிருந்தே வீர சவார்க்கர் மீது அனைத்து விதமான அவதூறு பிரச்சாரங்களையும் செய்து வந்தது. பின்னர் அரசு அதிகாரம் காங்கிரஸ் மற்றும் அதன் நகலிகளிடமிருந்து மாறியதும் இப்பிரச்சாரம் இடதுசாரி அறிவு ஜீவிகளாலும் அவர்களது சில மேற்கத்திய நண்பர்களால் 'ஆராய்ச்சி ' என்ற போர்வையிலும் நடந்து வருகிறது.

வீர சவார்க்கர் ஒரு பிரிட்டிஷ் அடிவருடி (உதாரணமாக ராம் புண்யானி மற்றும் ப்ரண்ட்லைன்) என்பதிலிருந்து அவர் ஒரு இனவெறி பிடித்த நாஜி கோட்பாடுடையவர் (இத்தாலிய 'ஆராய்ச்சியாளர் ' மார்ஸியா கஸோலாரி) என்பது வரை இப்பிரச்சாரம் பல மேடைகளில் பல உருவங்களில் பரப்பப்படுகிறது. அண்மையில் தீராநதி ராம் புண்யானியின் வழக்கமான இந்த குற்றச்சாட்டினை எவ்வித கேள்விக்கும் உட்படுத்தாது வெளியிட்டு தன் அறிவுஜீவி தர்மத்தை நிலை நாட்டியுள்ளது.
ஆனால் உண்மை என்ன ? வீர சவார்க்கர்தான் எப்படிப்பட்டவர் ?
ஹிந்துத்வ சித்தாந்த தந்தை என்றறியப்படும் வீர சவார்க்கர் குறித்த முதல் பிரச்சார அவதூறு அவரால் பிரிட்டிஷ் அரசிற்கு 1913-இல் அளிக்கப்பட்ட கருணை காட்டக் கோரும் மனு குறித்தது. தன் புரட்சி நடவடிக்கைகளை முழுவதுமாக துறந்து பிரிட்டிஷ் அரசிற்கு விசுவாசமாக நடப்பதாக அம்மனுவில் வீர சவார்க்கர் குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ச்சியாக நடந்த நிகச்சிகளில் இம்மனுவும் ஒன்று. இதன் முன்னும் பின்னும் நடந்த நிகழ்ச்சிகளை வசதியாக வெட்டி எறிந்து விட்டு காட்டப்படுகையில் பிரிட்டிஷ் அரசிடம் சவார்க்கர் சரணடைந்து விட்டதாக உணர்த்தும் இதே நிகழ்ச்சி சங்கிலித்தொடரென நடந்த நிகழ்ச்சிகள் வரிசைபடுத்த படுகையில் அதற்குரிய சரியான முக்கியத்துவம் அல்லது முக்கியமற்ற தன்மையை பெறுகிறது. அந்நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

ஜூன் 8, 1909 வீர சவார்க்கரின் அண்ணன் கணேஷ் தமோதர சவார்க்கருக்கு 25 வருட சிறைத்தண்டனை (ஆயுள் தண்டனை) விதிக்கப்படுகிறது.

டிசம்பர் 4,1910 வீர சவார்க்கருக்கு 25 வருட சிறைத்தண்டனை (ஆயுள் தண்டனை) விதிக்கப்படுகிறது

ஜனவரி 30,1911 வீர சவார்க்கருக்கு மற்றொரு 25 வருட சிறைத்தண்டனை (இரட்டை ஆயுள் தண்டனை) விதிக்கப்படுகிறது.

நவம்பர் 14,1913 வீர சவார்க்கர் கையெழுத்திட்ட கருணை மனு சமர்ப்பிக்கப்படுகிறது ( 'சட்டரீதியான முன்னேற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் பிரிட்டிஷ் அரசின் மிக்க விசுவாசமான ஊழியனாக இருப்பேன். ')

1914 சிறை ஆவணக்குறிப்பு 'பிரிட்டிஷ் அரசிற்கு எதிரான ராஜ துரோக இலக்கியங்களை சிறைக்கு ள் பரப்பிய காரணத்துக்காக சவார்க்கருக்கு தண்டனை அளிக்கப்படுகிறது. ' 1

1923 இந்திய தேசிய காங்கிரஸ் வீர சவார்க்கரின் உடனடி விடுதலையைக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது.
ஜனவர் 6, 1924 (இரத்னகிரி மாவட்டத்திற்கு வெளியே செல்லகூடாது என்பது போன்ற) நிபந்தனையுடனான விடுதலை

ஆக, உலகெமெங்கும் புரட்சியாளர்கள் பயன்படுத்தும் 'பதுங்கியிருந்து பாயும் ' தந்திரத்தையே வீர சவார்க்கர் கையாண்டார் என்பது தெளிவு. தன் கருணை மனுவிற்கு பிறகும் வீர சவார்க்கர் பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக புரட்சி நடவடிக்கைகளை கைவிடவில்லை என்பதற்கு தெள்ளத் தெளிவான ஆவண ஆதாரங்கள் இருந்த பின்பும் கூட 1913-இன் கருணை மனு வாசகங்களை வேண்டுமென்றே அவதூறு பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் இந்த போலி வரலாற்றாசிரியர்களும், இவ்வுண்மைகளை எவ்வித ஆய்வுமின்றி மக்களிடையே தங்களுக்கு அறிவு ஜீவி ஜிகினாத்தன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காகவே பரப்பும் பத்திரிகைகளும் இன்று அனுபவிக்கும் விடுதலை வீர சவார்க்கரின் குடும்பம் தன்னைத்தானே அழித்ததன் விளைவாக கிடைத்த ஒன்றுதான் என்பது ஒரு இந்திய முரண்நகை.

மார்ஸியா கஸோலாரி போன்றவர்களால் கூறப்படும் மற்றொரு குற்றச்சாட்டு வீர சவார்க்கரின் நாஜி மற்றும் பாசிச கோட்பாட்டு ஈர்ப்பும் அதன் அடிப்படையில் இனவாத ரீதியில் சமைக்கப்பட்ட இந்திய கோட்பாடே சவார்க்கரிய ஹிந்துத்வம் என்பதும்.

வீர சவார்க்கரின் 'ஹிந்துத்வம் ' (1917/1923) எனும் நூல் ஹிந்துத்துவ சித்தாந்த பரிணாமத்தில் ஒரு முக்கிய மைல்கல். ஆனால் ஹிந்து தேசியத்தின் வேர்கள் அதைக்காட்டிலும் வயதானவை. நவீன அரசியல் சித்தாந்தமாக ஹிந்து தேசியத்தை
பொதுவாக வரலாற்றறிஞர்கள் ராஜ் நாராயண் போஸ் மற்றும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி ஆகியோரது எழுத்துக்களிலிருந்து தொடங்குவதாக கருதுகின்றனர். 1917ெஇல் வீர சவார்க்கரால் அந்தமான் சிறைகளில் மிகுந்த இன்னல்களுக்கிடையே எழுதப்பட்ட இந்நூல் கடத்தி வரப்பட்டு பிரசுரிக்கப்பட்டது 1923 ஆம் ஆண்டில். இதில் காணப்படும் இனவாத கோட்பாட்டின் அழுத்தத்தை இதோ காணலாம்,
'உலகமெங்கிலும் இருப்பது ஒரே இனம் - ஒரே மனித இரத்தத்தால் உயிர் வாழும் மனித இனம்தான். மற்ற அனைத்து விஷயங்களும் சார்பியல் தன்மையுடையவைதான். இனத்துக்கு இனம் என்று மனிதன் எழுப்பும் செயற்கை அரண்களையெல்லாம் இயற்கை என்றும் உடைத்தெறியவே செய்யும். உங்களுடைய அனைத்து தேவ தூதர்களையும் விட, தீர்க்கதரிசிகளையும் விட பாலியல் ஈர்ப்பு ஆற்றல் வாய்ந்தது....துருவம் முதல் துருவம் வரை மானுட இனத்தின் ஒற்றுமையே உண்மை. மற்ற அனைத்து பிரிவுகளும் சார்புடையனதாம். ' 2
போலி மதச்சார்பற்ற வாதிகளின் மேற்கத்திய பிரச்சாரத்திற்கும் இந்திய பிரச்சாரத்தையும் ஒப்பிடும் போது அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு சங்கடம் தெரிகிறது. உதாரணமாக இந்தியாவில் வீர சவார்க்கர் தன் கருணை மனுவிற்கு பின் ஒரு தடவை கூட பிரிட்டிஷாரை எதிர்க்கவில்லை என நிரூப்பிக்க வேண்டியிருக்கிறது. மேற்கிலோ அவர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான நாசிகளுடன் தொடர்புடையவர் என காட்ட வேண்டியுள்ளது. ஆக ராம் புண்யானி சவார்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒரு தடவை கூட வீர சவார்க்கர் பேசவில்லை எனக் கூறும் அதே சமயம், இந்திய இடதுசாரிகளின் மேற்கத்திய பிரச்சார பீரங்கிகள் வீர சவார்க்கர் 1938 நவம்பரில் ஹிந்து மகாசபையில் உலகப்போரில் இந்திய நிலை குறித்து பேசியதை நாசிகளுக்கு ஆதராவாக இருந்ததாக காட்ட பயன்படுத்துவார்கள். 1938 நவம்பரில் அவர் பேசியதாவது, 'எந்த சக்திகள் இந்தியாவுக்கு அதன் சுதந்திர போராட்டத்திற்கு உதவுகிறதோ அதுவே நம் நண்பன், அதற்கு எதிரானவர்கள் நம் எதிரிகள். நம்மை குறித்து நடுநிலை வகிப்பவர்களைக் குறித்து நாமும் கவலைப்பட தேவையில்லை. ' 3

உலக நாடுகளுக்கு ஒரு அடிமை சமுதாயம் அந்த அடிமைத்தனத்தையே ஒரு நற்பண்பாக காட்டி ஒழுக்க விதிகளை போதிப்பதை விட்டு இந்தியாவின் நலனைக் கருதிய நிலைபாடுகளையே எடுக்க வேண்டும் என்பதே வீரசவார்க்கரின் கருத்தாக இருந்தது என்பது தெளிவு.