காஷ்மீரில் தொடர்ந்து போலீஸுக்கும் மக்களுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. போலீஸார் மீது மக்கள் கல்லெறிந்து, வன்முறையில் ஈடுபடுவதும், மக்களைக் கட்டுப்படுத்த போலீஸ் முனைவதும், சில உயிரிழப்புகள் ஏற்படுவதும் – கிட்டத்தட்ட தினந்தோறும் நடக்கிற நிகழ்ச்சிகளாகி விட்டன. காஷ்மீரில் தீவிரவாதிகளின் அட்டகாசம் அவ்வப்போது நிகழ்ந்தாலும், இப்போது நடப்பது, சாதாரண மக்களே பங்கேற்கிற நிகழ்ச்சிகள் என்று சொல்லப்படுகிறது. இருக்கலாம். தீவிரவாதிகள் அல்லது பிரிவினைவாதிகளின் தூண்டுதலும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
போலீஸார் ஒரு குடிமகனைச் சுட்டு வீழ்த்தியதுதான் இந்தக் கலவரங்களுக்கு ஆரம்பம் என்று கூறப்பட்டாலும், பிற சக்திகளின் தூண்டுதல் இல்லாமல், பல நாட்களாக மக்களின் ‘கோபம்’ இப்படி தொடர்ந்து கொண்டிருக்காது என்றே தோன்றுகிறது.
இந்த மாதிரியான சூழ்நிலையில், ஒரு அரசு, கலவரத்தை அடக்குகிற வழிமுறைகளைத்தான் உடனடியாகக் கவனிக்க வேண்டும். ஆனால், நமது மத்திய அரசோ, இந்தச் சமயம் பார்த்து ‘சர்வ கட்சிகளுடன் ஆலோசனை; காஷ்மீருக்கு சில விசேஷ சலுகைகள்...’ என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறது. பிரதமர், ‘காஷ்மீருக்கு சுயாட்சி தருவது பற்றி யோசிக்கத் தயார்’ என்று கூறுகிறார். இதைவிட கையாலாகாத்தனம் வேறு இருக்க முடியாது. மக்கள் தொடர்ந்து போலீஸாருடன் மோதுகிறார்கள் என்றால் – அதற்கு முக்கிய காரணம், ‘இந்த மத்திய அரசு கோழைத்தனமானது’ என்ற எண்ணம்தான்.
‘தீவிரவாதிகளுக்கு எதிராக விசேஷ சட்டம் வேண்டாம் என்று கூறி, ‘பொடா’ சட்டம் ரத்து; பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில், முதல் குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனை, வேண்டுமென்றே நிறைவேற்றப்படாமல் இருப்பது; குஜராத் போலீஸாரால் வீழ்த்தப்பட்ட இர்ஷாத் ஜஹான் தீவிரவாதத் தொடர்புடையவர் என்றும், பின்னர் இல்லை என்றும் நீதிமன்றத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பிரமாணப் பத்திரம் அளிப்பது; ஒரு தீவிரவாதியின் மரணத்தை, ஒரு அப்பாவியின் மரணமாகச் சித்தரித்து, குஜராத் அரசை ஆட்டம் காணச் செய்யப்படுகிற முயற்சி; நக்ஸலைட்களுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்தலாமா கூடாதா என்று பேசிக் கொண்டேயிருப்பது; நக்ஸலைட் பிரச்சனையை அணுக வேண்டிய முறை குறித்து, ஆளும் கட்சியிலேயே உள்ள வாதப் பிரதிவாதம் பொதுமேடைகளில் அரங்கேறுவது...’ என்றெல்லாம் ஓர் அரசு செயல்படுகிறபோது, அந்த அரசின் மாட்சிமையை எதிர்ப்பவர்களுக்கு அச்சமோ, தயக்கமோ உண்டாகுமா என்ன?
இந்த உறுதியற்ற அணுகுமுறையைக் கைவிட்டு, கலவரத்தை ஒடுக்க முயற்சிப்பதற்குப் பதிலாக, ‘சுயாட்சி தருவது பற்றி யோசிக்கிறோம்’ என்கிறார் பிரதமர்.
காஷ்மீருக்குக் கொடுக்கப்பட்டுள்ள விசேஷ சலுகைகள் நிரந்தரமானவை அல்ல. அவை தாற்காலிகமானவையே என்று அரசியல் சட்டமே கூறுகிறது. சில வருடங்களில் போயிருக்க வேண்டிய அந்தச் சலுகைகளை நீக்குவதை விட்டு, ‘சுயாட்சி’ தருவதாகக் கூறுவது, மிகவும் பொறுப்பற்ற பேச்சாக இருக்கிறது.
நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்க வேறு வழியே வேண்டாம். இன்று காஷ்மீருக்கு சுயாட்சி என்றால், நாளை அஸ்ஸாமுக்கு சுயாட்சி, அடுத்த நாள்... என்று ‘சுயாட்சிப் பட்டியல்’ நீண்டு கொண்டே போகும். காஷ்மீரில் சுயாட்சி என்பது, சுதந்திரம் என்ற கோஷத்திற்குப் பாதை அமைக்கும்.
பிரதமர் பலவீனமானவர் என்று அத்வானி வர்ணித்தபோது, நாட்டில் பலர் அதை ஏற்கவில்லை; அப்படிப்பட்டவர்களுக்கு, அத்வானியின் விமர்சனத்தில் உள்ள உண்மையை, பிரதமர் நிரூபிக்காமல் விட மாட்டார் போலிருக்கிறது.
நன்றி-துக்ளக் 23 .08 .2010