பிரிவினைவாதத்தை தடுக்க முதல்வர் விரும்பவில்லை:பொன்.ராதாகிருஷ்ணன்

முத்துப்பேட்டை:தமிழகத்தில் பிரிவினைவாதத்தை தடுக்க தந்தையைப் போல் உள்ள முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை,'' என, தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே பாரதிய ஜனதா சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்தும் மற்றும் புதிய நிர்வாகிகளுக்கான பாராட்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.
மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:முத்துப்பேட்டை பகுதியில் ஹிந்து, முஸ்லீம்கள் இடையே தொடர்ந்து வரும் பிரச்னையை தீர்த்துவைக்க தமிழக அரசு விரும்பவில்லை. ஓட்டுக்காக பிரிவினைவாதத்தை தூண்டும் விதத்தில் செயல்படுகிறார்கள். சிறுபான்மையினர் என்ற நிலையில், முஸ்லீம்களுக்கு கல்விச் சலுகைகளை அரசு வழங்கி வருவது மதமாற்றத்தை தூண்டுவதற்கு அடிப்படையாக அமையும்.
தந்தை ஸ்தானத்தில் உள்ள முதல்வர் நினைத்தால் இப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வர முடியும். அன்று மண்டைக்காட்டில் தொடர்ந்து வந்த பிரச்னையை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., தீர்த்து வைத்தார்.எனவே, முத்துப்பேட்டை பகுதியில் தொடரும் பிரச்னைக்கு தமிழக முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கு முஸ்லீம்களும் ஒத்துழைப்பு தந்தால், முடிவுக்கு கொண்டு வர நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கு அவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

மாநில துணைத்தலைவர் ராஜா பேசுகையில், விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். ஆன்லைன் வர்த்தகம் மூலம் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை. காரணம், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம், கனிமொழி மற்றும் மத்திய அமைச்சர்களின் மகன்கள் இதில், ஈடுபட்டுள்ளதால் தடை செய்ய மத்திய அரசு தயாராக இல்லை. மத்திய, மாநில அரசுகள் உடன் விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.நகர செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்