உணர்ந்தால்தானே...

தீவிரவாதிகளுக்குத் தேவைப்படும் பணம், வளர்ந்த நாடுகளிலிருந்துதான் போகிறது என்பதால் தங்கள் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குப் போகும் பணம் எதற்காகக்  கொடுக்கப்பட்டது என்பதைத் துருவித்துருவிப் பார்ப்பதில் அமெரிக்க அரசு மிகவும் கறாராக இருக்கிறது. இப்படியான ஒரு கணக்கு வழக்கில் சிக்கிக் கொண்டுள்ள கலிபோர்னியாவைச் சேர்ந்த "கன்ட்ரோல் காம்பனன்ட் இன்க்' என்ற நிறுவனம், தான் வெளிநாடுகளுக்கு அளித்த பணம் தனது நிறுவனத்துக்கு ஆர்டர்கள் பெறுவதற்காகக்  கொடுக்கப்பட்ட லஞ்சம் என்று பட்டியலோடு, பணத்தின் அளவையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளது.
சரி, அதனால் என்ன? என்று கேட்கலாம். அந்தப் பட்டியலில் பல இந்திய நிறுவனங்களின் பெயர்கள் இருக்கின்றன என்பதும், அவர்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்ட விவரமும் இதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதும்தான்.
இந்த அமெரிக்க நிறுவனம் மின்னுற்பத்தி நிலையங்களுக்குத் தேவைப்படும் வால்வுகளைத் தயாரிக்கிறது. இந்த வால்வுகளுக்கு மின்நிலையங்கள் உலக அளவிலான ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரும்போது, இந்த நிறுவனமும் தனது விலையைக் குறிப்பிட்டு, ஒப்பந்தம் கோருகிறது. ஆனால், தனக்கு மட்டுமே இந்த ஆர்டர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அந் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறது. 2003 முதல் 2007-ம் ஆண்டு வரை, இந்தியா, சீனா, கத்தார் உள்பட 36 நாடுகளுக்கு இத்தகைய முறைகேடான வழிகளைப் பின்பற்றி, தனது வால்வுகளை விற்பனை செய்துள்ளது இந் நிறுவனம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, நவரத்தின நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல் லிமிடெட், மகாராஷ்டிர மாநில  மின்வாரியம், ஹரியாணா மாநில மின்வாரியம், தேசிய அனல் மின்னுற்பத்திக் கழகம், பிலாய் எலக்ட்ரிக் ஆகிய நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் உள்ள மிக முக்கியமான நிறுவனங்கள். இதில் லஞ்சம் வாங்கியவர்கள் யார், எவ்வளவு தொகை என்பது இந்நிறுவனம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றாலும், இப்போதைக்கு அதை அமெரிக்க நீதிமன்றம் வெளியில் தெரிவிக்காது.
இருப்பினும், தேசிய அனல் மின்னுற்பத்திக் கழக (என்.டி.பி.சி.) சிபட் நிலக்கரி அனல் மின்னுற்பத்தி நிலையத்துக்காக 1.63 லட்சம் அமெரிக்க டாலர்களை இரு தவணையாக அளிக்கப்பட்டதும், அதை மாஸ்கோவில் அலுவலகத்தைக் கொண்டிருக்கும் நிறுவனத்தின் பொறுப்பாளர் விளாதிமிர் பாதென்கோ மூலம் கொடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இருந்தாலும்கூட, இந்த அதிகாரிகள் வெறும் தேனை எடுத்து புறங்கை நக்கியவர்களாக இருப்பார்களே தவிர, தேன் அடையை முழுமையாக எடுத்துச் சென்றவர்கள் நிச்சயமாக அரசியல் பின்புலம் உள்ளவர்களாக மட்டுமே இருக்க முடியும். இவர்களால்தான் வெளிநாட்டில் நிறுவனத்தைத் தொடங்கவும், அமெரிக்க டாலர்களை அப்படியே வெளிநாட்டு வங்கிகளில் போட்டு வைக்கவும் முடியும். இதையெல்லாம் உயர் அதிகாரிகள்  செய்வது மிகவும் கடினம்.
வெளிநாடுகளில் நிலக்கரி வாங்குவது, எண்ணெய் இறக்குமதி, பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதி, ஆயுதங்கள் வாங்குவது, முக்கியமான கருவிகளை உலக அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரி வாங்குவது, அல்லது இந்தியாவில் அணைகள் அல்லது மிகப்பெரிய பாலங்கள், கட்டடங்கள் போன்றவற்றுக்காக உலக ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு, அயல்நாட்டு நிறுவனங்களைப் பணியில் அமர்த்துவது ஆகிய அனைத்திலுமே இதுபோன்று கையூட்டுகள் அளிக்கப்படுகின்றன என்பதும், இவற்றை இந்திய மண்ணுக்குள் கொண்டுவராமல் மோரிஷஸ், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளாக மாற்றிக் கொள்வதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் ஓரளவு அரசியல் அனுபவம் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தேர்தல் நேரங்களில் இந்தக் கருப்புப் பணம் ஓரளவுக்குக் களத்தில் இறக்கிவிடப்பட்டாலும், மீதிப் பணம் இந்த அரசியல்வாதிகளின் முதலீடாக வெளிநாட்டு வங்கிகளிலேயே இருக்கிறது. இவர்கள் ஆட்சியில் இல்லாத போதும், அரசியலில்  இல்லாதபோதும் இந்தப் பணம் அவர்களுக்குத் துணையாக இருக்கிறது.
அரசியல்வாதிகளுக்குத் துணைபோகும் அதிகாரிகள், இந்த மோசடியை ஒப்பிட்டுப்பார்க்கையில் மிகச்சிறிய தொகையைப் பெற்றுக்கொண்டு மிகப்பெரும் பழியை ஏற்றுக்கொள்வதோடு, அதிகாரிகளின் வர்க்கத்துக்கே அவப்பெயரையும், தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தி விடுகிறார்கள். தவறு செய்யும் அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டுவதும், கவசமாக இருந்து காப்பாற்றுவதும் மட்டுமே தங்களது கடமை என்று கருதும் அதிகார வர்க்கத்தை யார் திருத்துவது?
தாராளமயமாக்கல் என்கிற பெயரில் தாராளமயமாக்கப்பட்டிருப்பது வர்த்தகம் மட்டுமல்ல. முறைகேடான வியாபார உத்திகளும், 20 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனையே செய்து பார்த்திருக்க முடியாத கையூட்டுகளும், இந்தியாவின் இறையாண்மைக்கும், மக்களாட்சித் தத்துவத்துக்கும் உலை வைக்கும் திட்டங்கள், நடைமுறைகள், செயல்பாடுகள் போன்றவையும் அரங்கேறி இருப்பதற்குக் காரணமே தாராளமயமாக்கப்பட்ட உலகமயக் கொள்கைதான். பொதுத்துறை வங்கிகள்கூட, வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தி வியாபாரத்தைப் பெருக்கி லாபம் ஈட்டுவதைக் கைவிட்டுவிட்டு, வாடிக்கையாளர்களை எப்படியெல்லாம் கசக்கிப் பிழிந்து, ஆசைகாட்டி மோசம் செய்து லாபத்தைக் காட்டலாம் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
இப்போது வெளிவந்திருப்பது அதிகார வர்க்கத்துக்கு அளிக்கப்பட்ட கையூட்டு. வெளிவராமல் இருப்பது ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு வங்கிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் பங்குத் தொகை. ஆட்சியில் அமர்ந்த 15 நாள்களில் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டிருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் கருப்புப் பணத்தை வெளிக்கொணர்வதாகச் சொன்ன பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தலைசிறந்த பொருளாதார நிபுணர் என்று கருதப்படுபவர். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளுக்குத் தரப்படும் வாக்குறுதிகள் மட்டும்தான் நினைவில் தங்குகின்றன. இந்திய மக்களுக்குத் தரும் வாக்குறுதிகளை மறக்காமல் இருக்க அவர் என்ன மக்களைச் சந்தித்து, தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராகிப் பிரதமரானவரா? இல்லையே.
இப்படியே போனால் 540 மக்களவை உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கி ஒரு கைப்பாவை அரசை வைத்து ஆட்சி நடத்தி, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி பாணியில் ஒரு வல்லரசுச் சுரண்டல் நடைபெறுவதுகூட சாத்தியமாகிவிடுமே. இந்தியாவைக் காப்பாற்றியாக வேண்டிய பெரும் பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கிறது. உணர்ந்தால்தானே!