கரூர், ஜூலை 8: திராவிடர் கழகத்திற்கு இந்து முன்னணி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.
கரூரில் அண்மையில் மாநில அளவிலான இந்து முன்னணி மாநாடு நடைபெற்றது. இதையடுத்து, திகவின் மண்டல மாநாடு ஜூலை 6-ல் கரூரில் நடைபெற்றது. இதை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் திகவிற்கு 4 கேள்விகள் கேட்கப்பட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இந்தக் கேள்விகளுக்கு மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பதிலளித்ததோடு, சில கேள்விகளையும் கேட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்தக் கேள்விகளுக்கு, கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விளக்கம் அளித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
திக தலைவராக தலித் ஒருவரை நியமிக்காதது ஏன் என்ற கேள்விக்கு, காஞ்சி சங்கரமடத்தில் தலித் ஒருவர் தலைவராக நியமிக்கப்படும்போது, திகவிலும் நியமிப்போம் என்று வீரமணி தெரிவித்துள்ளார்.
காஞ்சி சங்கரமடம் பிராமணர்களால், மதுரை ஆதீனம் மடம் பிள்ளைமார்களாலும், கோவை மருதாச்சலம் அடிகளார் மடம் கவுண்டர்களாலும், கோவினூர் மடம் செட்டியார்களாலும் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு சமுதாய ரீதியாக மடங்கள் உள்ளன.
திக கடவுள் மறுப்பு இயக்கமாக இருந்து வந்ததா?, இல்லை ஒரு ஜாதி சார்ந்த இயக்கமா என்பதைத் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
கடவுள் இல்லை என்ற மாநாட்டில் பங்கேற்கும் அரசியல் கட்சியினர், தாங்கள் தேர்தலில் போட்டியிடும்போது, கடவுள் இல்லை என்று கூறுவோரின் வாக்குகள் மட்டுமே போதும்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம் என்று கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது இந்து முன்னணி.