தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது?

வாழ்க்கையில் சில கேள்விகள் எப்போதும் நிலையாக இருக்கின்றன. பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன. அதைப் போன்ற ஒரு கேள்விதான் தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது? இதற்கான பதில் நேற்றுவரை தஞ்சை என்பதுதான். ஆனால், இனிமேல் இந்தப் பதிலைச் சொல்ல முடியுமா என்பதில் ஐயம் இருக்கிறது. ஏனென்றால், தஞ்சை டெல்டா பகுதியில் மிகக் குறைவாகவே குறுவை நெல் சாகுபடி நடைபெற்றுள்ளது.
ஆண்டுதோறும் சராசரியாக சுமார் 3 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுவந்த நிலைமை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாறியிருக்கிறது. முந்தைய ஆண்டு 56,500 ஹெக்டேரில் குறுவை நெல் சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு 53,000 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, தஞ்சை டெல்டா மாவட்டப் பகுதிகளில் இந்த அளவு வெறும் 14,000 ஹெக்டேர் மட்டுமே.
இதற்குக் காரணமான மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படவில்லை என்பதாகக் கூறப்படுகிறது. குறைந்தபட்சம் 50 டிஎம்சி தண்ணீர் இருக்க வேண்டும் என்றும், தற்போது மேட்டூர் அணையில் 41 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருப்பதால், அணை திறக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. என்றாலும், இதையும் ஒரு காரணமாகக் கொள்ளலாமே தவிர, இதுவே முழுமையான காரணம் கிடையாது. சரியாக ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாத ஆண்டுகள் பல. தண்ணீர் திறக்கப்படுவது தாமதமானாலும்கூட, குறுவையை கிணற்றுப்பாசனம் அல்லது ஆழ்துளைக் கிணற்றுப் பாசனத்தை நம்பி தொடங்கிவிடுவார்கள். மேட்டூர் அணை தாமதத்தால் ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்து வந்தது.
மேலும், திறமையான பொறியாளர்கள் பொதுப்பணித் துறையில் முக்கிய பதவிகளில் இருக்கும்போது, இத்தகைய குறைபாடுகளைச் சரியாகக் கணித்து சீர்செய்த சம்பவங்களும் உண்டு. மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வர வேண்டுமென்றால், கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் துணை நதிகளில் உள்ள அணைகள் அனைத்திலும் உள்ள நீர் இருப்பு, அடுத்த சில வாரங்களில் பெய்யக்கூடிய மழையளவு, இதனால் கர்நாடக அரசு எத்தனை முயன்றாலும் முடியாமல் திறந்த ஆக வேண்டிய நீரின் அளவு அனைத்தையும் கணித்து,  அணையில் தண்ணீர் இருப்புக் குறைவாக இருந்தாலும்கூட, திறந்துவிடச் செய்த காலமும் உண்டு. சில ஆண்டுகளில் சில பகுதிகளில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யும்படி அறிவுறுத்தப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால், இப்போது அத்தகைய எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபடுவதில்லை. அமைச்சர்களுக்கு இதுகுறித்து ஆலோசனைகளும் வழங்குவதில்லை. அமைச்சர்களுக்கும் இதை யோசிக்க நேரமில்லை.
அடுத்ததாக, நெல் சாகுபடிக்கு ஆகும் செலவினங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பதும், அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாகுபடிக்கான விதைநெல்  கொள்முதல், உரம், பண்ணை வேலையாள்களுக்குப் பெரும்தட்டுப்பாடு (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டமும் சேர்ந்து கொள்கிறது) கரும்புக்குக்  கொடுக்கப்படும் அதிக விலைபோல நெல்லுக்கு விலை கிடைப்பதில்லை என்ற மனக்கசப்பு ஆகிய இவை யாவும்தான் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவதற்குக் காரணம். பலர் கரும்பு சாகுபடிக்கு மாறி விட்டார்கள்.
தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள குறைந்த பரப்பளவும்கூட, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நீர் இறைக்க வாய்ப்புகள் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது. இவர்களில் இன்னும் பலர் ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்ய முடியும் என்றாலும், கோடையின் மின்தடை விவசாயத்துக்கும் மிகப்பெரும் தடையாக இருக்கிறது.
குறுவை நெல் சாகுபடிக்கு ஏற்பட்டுள்ள இந்த "நோய்' வழக்கமான சம்பா சாகுபடிக்கும் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து அரசு இப்போதே இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிப்பது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியத்தின் பெருமையைத் தக்க வைத்துக்கொள்ள உதவும். குறிப்பாக, நெல் கொள்முதல் விலையை சாகுபடி செலவினங்களுக்கு ஏற்ப உயர்த்தித் தருவதுதான் மிக முக்கியமான நடவடிக்கையாக இருக்க முடியும்.
அடுத்ததாக, ஏதோ சில காரணங்களால், நெல் சாகுபடிப் பரப்பளவு குறைவதைப் போலவே ஒரு ஹெக்டேருக்கான நெல் உற்பத்தி அளவிலும்கூட குறைவுபட்டுக்கொண்டே வருகிறோம் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 2008-2009-ம் நிதியாண்டின் புள்ளிவிவரப்படி, தமிழக நெல் சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்குக் கிடைக்கும் நெல் உற்பத்தி 2,683 கிலோ மட்டுமே.
அப்படியானால் மற்ற மாநிலங்களில் நெல் உற்பத்தி ஒரு ஹெக்டேருக்கு என்னவாக இருக்கிறது? தில்லியில் 4,243 கிலோ, பஞ்சாபில் 4,022 கிலோ, ஆந்திரத்தில் 3,246 கிலோ, அந்தமான் நிகோபார் தீவில் 2,797 கிலோ, ஹரியானாவில் 2,726 கிலோ, தமிழ்நாட்டில் 2,683 கிலோ. அதாவது இந்தியாவில் 7-வது இடத்தில் இருக்கின்றோம். (காவிரித் தண்ணீரை வம்படியாகப் பிடித்து வைத்துக் கொண்டுள்ள கர்நாடகம் 11-வது இடத்தில் இருக்கிறது. அங்கே, ஒரு ஹெக்டேருக்கு 2,511 கிலோ நெல் விளைகிறது).
தமிழ்நாட்டில் நெல் சாகுபடிப் பரப்பு குறையத் தொடங்கியுள்ளது. ஒரு ஹெக்டேருக்கான உற்பத்தி அளவும் குறைவாக இருக்கிறது. ஆனால், நியாயவிலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கிடைப்பதும் சாத்தியமாகிறது. நெல்லை விளைவித்து, விற்றதும், விதைநெல்லும் போக, மீதமுள்ளதை வைத்து வயிறார உண்ட விவசாயி, ஒரு ரூபாய் அரிசிக்காக நியாயவிலைக் கடையில் காத்து நிற்கிறார். இது என்ன முரண்?