பாஜகவின் போராட்டங்கள் யாரையும் புண்படுத்துவதற்கு அல்ல: பொன். ராதாகிருஷ்ணன்




திருத்துறைப்பூண்டி, ஜூலை 24: பாஜகவின் போராட்டங்கள் மற்றவர்களை புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல என்றார் அக்கட்சியின் தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன்.
    சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்படுவதை போல, இந்து மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும், கோரிக்கை பொது விளக்கக் கூட்டமும் சனிக்கிழமை நடைபெற்றது.
    அப்போது, கூட்டத்துக்குள் திடீரென புகுந்த நோயாளிகள் யாரும் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனத்தால் தகராறு ஏற்பட்டு, மறியல், தடியடி நடத்தப்பட்டது. கல்வீச்சும் சம்பவமும் நடைபெற்றது.
    இதுகுறித்து பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
    இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல இந்தப் போராட்டங்கள்.
      காவல் துறையினரின் அனுமதி பெற்றே, இந்தப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
திருத்துறைப்பூண்டியில் அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே சிலர் திட்டமிட்டு செயல்பட்டனர்.
     கூட்டத்துக்குள் புகுந்த வாகனத்தின் ஓட்டுநர் மீது போலீஸôர் வழக்குப் பதிந்ததை தொடர்ந்து, பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை என்றார் அவர்.