தமிழக சிலைகளை கடத்தி அமெரிக்காவில் விற்பனை

சென்னை: தமிழகத்தின் புராதனமான சாமி சிலைகளைக் கடத்தி அமெரிக்காவில் விற்று வரும், நியூயார்க்கில் வசிக்கும் இந்தியரைக் கைது செய்ய தமிழக போலீஸார் இன்டர்போலின் உதவியை நாடியுள்ளனர்.


பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த சுபாஷ் கபூர் (62), நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். நியூயார்க் மடிசன் அவென்யூவில் ஒரு மியூசியமும் சிலைகள் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறார்.
உலகின் பல்வேறு நாட்டு அருங்காட்சியகங்களுக்கும் சுபாஷ் சிலைகளை விற்று வருகிறார்.
இந் நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மிகப் பழமை வாய்ந்த கோவில்களில் இருந்து ஐம்பொன் சாமி சிலைகள் திருடப்படுவது அதிகரித்து வருகிறது. இவை வெளிநாடுகளுக்கு கடத்தி விற்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சிலை திருட்டு கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தப் படையிடம் சஞ்சீவி அசோகன் என்ற நபர் சி்க்கினார்.
அவரிடம் விசாரணை நடத்தியபோது, திருச்சி , தஞ்சை, பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிலைகளை திருடி, வெளிநாடுகளில் விற்றது தெரியவந்தது.
இந்த சிலைகளில் 90 சதவீதத்தை சுபாஷ் கபூரிடம் தான் விற்றதாக சஞ்சீவி அசோகன் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் சிலைகளை பார்வையிட்டுவிட்டுச் செல்ல அவர் பலமுறை தமிழ்நாட்டுக்கும் வந்து சென்றது உறுதியாகியுள்ளது.
அவர் பார்த்து ஓ.கே. சொன்ன பின் சிலைகளை சர்வதேச கும்பல்கள் மூலம் கடத்துவது சஞ்சீவி அசோகனின் வேலையாக இருந்துள்ளது. இப்போது அசோகன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் தமிழ்நாட்டின் அரிய சாமி சிலைகளை திருடப்பட்ட சம்பவங்களில் சுபாஷ் கபூருக்கு நேரடி தொடர்பு இருப்பதால் அவரை பிடிக்க தமிழக போலீசார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சுபாஷ் கபூரை கைது செய்ய ஜெயங்கொண்டம் நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் பேரில் சுபாஷ் கபூரை கைது செய்ய சிபிஐ மூலமாக இன்டர்போலை தமிழக காவல்துறை நாடியுள்ளது.