வேளாங்கண்ணி மாதா கோவில் அருகே13 சாமி சிலைகள் கண்டெடுப்பு: ஆச்சரியத்தில் மக்கள்


ஆகஸ்ட் 3, 2010
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணியில் உள்ள மாதா கோவில் அருகே பஞ்சலோகத்தால் ஆன சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


வேளாங்கண்ணியில் உள்ள புகழ் பெற்ற மாதா கோவில் ஆர்ச் அருகில் தீயணைப்புத்துறை அலுவலகம் உள்ளது. அதற்கு எதிரில் உள்ள வெற்றிடத்தை ஆரோக்கிய சாமி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் விலைக்கு வாங்கினார்.

அந்த இடத்தில் வீடு கட்ட முடிவெடுத்தார் ஆரோக்கியசாமி. வீட்டின் அஸ்திவாரத்துக்கு குழி தோண்டியபோது, 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சித்துறைக்கு அவர் தகவல் கொடுத்தார்.


இந்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கும் கிடைத்தது. அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் முனியநாதன் முன்னிலையில் தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர் மீண்டும் தோண்டினர். அப்போது மேலும் 10 சாமி சிலைகள் கிடைத்தன.
இதையடுத்து, அந்த இடத்தில் மேலும் சிலைகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சிலைகள் ஒவ்வொன்றும் 3 அடி உயரம் கொண்டவையாக உள்ளன. நடராஜர், விநாயகர் மற்றும் பிற தெய்வங்களின் சிலைகள் இவை. சிலைகளுக்கு அருகே சில அலங்காரப் பொருட்களும் கிடைத்துள்ளன.