விநாயகர் ஊர்வலத்தை முடக்க திட்டம்- ராம.கோபாலன் புகார்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அரசு முடக்க நினைக்கிறது. 25 ஆயிரம் இடங்களில் இந்தாண்டு விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம்.அரசு தடை விதித்தாலும் ஊர்வலம் நடந்தே தீரும் என இந்து முன்னணி நிறுவன தலைவர் ராம கோபாலன் தெரிவித்தார்.


திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் என்கவுன்டர் நடக்கிறது.குஜராத்தில் பா.ஜ., ஆட்சி நடப்பதால் அங்கு நடந்த என்கவுன்டர் குறித்து கொச்சைபடுத்தப்படுகிறது.முஸ்லிம்,கிறிஸ்துவர்கள் இந்துக்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஜாதி வாரி கணக்கெடுப்பு ஆபத்தானது.போலி சாமியார்கள் பெருகிவிட்டனர்.யார் தவறு செய்தாலும் அது தவறு தான்.நீதிபதி தினகரன், ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் போன்றவர்கள் மதம் மாறி சலுகைகளை அனுபவிக்கின்றனர்.இலங்கை அருகே சீனா கப்பல்தளம் அமைத்து வருகிறது. இது நமது நாட்டிற்கு ஆபத்தானது.தமிழகத்தில் 36 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆன்மிகம் சாராத பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தை அரசு வழங்க வேண்டும்.விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை அரசு முடக்க நினைக்கிறது. கடந்த ஆண்டில் வைத்த இடத்தை விட புதிய இடத்தில் சிலைகள் வைக்க கூடாது என்கின்றனர். மாநிலத்தில் 25 ஆயிரம் இடங்களில் இந்தாண்டு விநாயகர் சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளோம். அரசு தடை விதித்தாலும் ஊர்வலம் நடந்தே தீரும். இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ. மாநில துணை தலைவர் ராஜா, ஆர்.எஸ்.எஸ்.மாநில அமைப்பாளர் கேசவவிநாயகம், வி.எஸ்.பி., மாநில அமைப்பு செயலாளர் நாகராஜன், மாவட்ட தலைவர் பாலாஜி உடனிருந்தனர்.